Tuesday, 16 August 2016

விமானப்படையில் ஏர்மேன் வேலை பிளஸ்-2 படித்தவர்கள் சேரலாம்

விமானப்படையில் ஏர்மேன் வேலை பிளஸ்-2 படித்தவர்கள் சேரலாம்
இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்று விமானப்படை. நாட்டின் வான்வழி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது விமானப்படை. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 'ஏர்மேன்' 'குரூப் ஒய்' (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சிக்கான நேரடி ஆட்சேர்க்கை முகாமில் பங்கேற்கலாம். மதுரை, எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 26 முதல் 31-ந் தேதி வரை இதற்கான ஆட்தேர்வு முகாம் நடக்கிறது.
அரியலூர், சென்னை, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, வேலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 26,27-ந் தேதியில் நடைபெறும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
கோவை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருவாரூர், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் இதர தேர்வு நடைமுறைகள் நடக்கின்றன.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் கீழே தரப்படுகிறது...
கல்வித் தகுதி:
குரூப் ஒய் (நான்- டெக்னிக்கல்) ஆட்டோமொபைல் டெக்னீசியன், ஜி.டி.ஐ மற்றும் ஐ.ஏ.எப்.(பி) பிரிவில் சேர விரும்புபவர்கள், பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/ இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1-8-1996 மற்றும் 30-11-1999 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்ப தேதியில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி:
மெடிக்கல் அசிஸ்டன்ட் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 165 மற்றும் 175 செ.மீ. உயரம் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை அவசியம். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை மருத்துவ தகுதிக்கு உட்பட்டு இருக்கிறதா என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு காலத்தைக் கொண்ட பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆட்சேர்க்கை முகாமில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க என்னென்ன ஆவணங்கள், நகல்கள், உபகரணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இணையதளத்தில் பார்க்கலாம். காலை 7 மணிக்கே தேர்வுகள் தொடங்கிவிடும் என்பதால் தயார் நிலையில் செல்ல வேண்டும். முதல் நாள் எழுத்து தேர்வும், இரண்டாவது நாளில் உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வுகளும் நடை பெறும்.
மேலும் விரிவான விவரங்களை www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment