Thursday, 18 August 2016

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 10 பல்கலை.களில் இலவச பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் நிலோபர் கபில்

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 10 பல்கலை.களில் இலவச பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் நிலோபர் கபில்
போட்டித் தேர்வுகளை கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ள 10 அரசு கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் தொழிலாளர்-வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட மேலும் பல அறிவிப்புகள்:
சட்டமுறை எடையளவு-சட்ட விதிகளை அறிந்து கொள்ளவும், நுகர்வோர் குறைகளைக் களையவும் கைப்பேசி செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது குறித்து விளம்பர குறும்படம் தயாரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஐ.டி.ஐ.க்களில் திறன் பயிற்சிகள்:
வேலைவாய்ப்பு பெறுவதற்காக பயிற்சி-பாடங்கள் இணைய வழியாக கற்பிக்கும் முறை ஏற்படுத்தப்படும்.8 தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 12 புதிய தொழிற் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். மேலும், 17 ஐ.டி.ஐ.க்களில் மொழி-மென்திறன் ஆய்வகம் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சிகள் வாயிலாக திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்கிட தொழில் பழகுநர் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். இதன்படி, மண்டல அளவில் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தேடி வருவோரின் தொழில் திறன்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க தனி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
திறனாய்வு போட்டிகள்:
அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது அனுபவத்தால் பெற்ற திறனை அங்கீகரித்து திறன் சான்றிதழ் வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும். இதன்படி, திறன் மதிப்பீடு செய்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெற்ற தொழிலாளர்களைப் பணியமர்த்தும் போது விபத்துகள் பெருமளவு குறையும். அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும், திறன் சான்றிதழ்கள் பெற்ற தொழிலாளர்கள் படிப்படியாக ஈடுபடுத்தப்படுவர்.
பேராபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளில் வெளியிடப்படும் நஞ்சு-நச்சுப்புகை அதிகபட்ச அளவுக்கு மிகாமல் கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கென சிறப்பு மென்பொருள் உருவாக்கி தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் கணினியுடன் கூடிய கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
கட்டுமானப் பணியிடங்களில் பயிற்சி வகுப்புகள்:
கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கட்டுமான இடங்களிலேயே பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கும் அவர்களது தாய் மொழிகளில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள்-புகைப்படங்களுடன் கூடிய தகவல் பலகைகள் தயாரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.
மருந்தகங்கள் இணைப்பு:
மீஞ்சூர் புறநகர், வாழப்பாடி புறநகர், பள்ளிப்பாளையம் புறநகர், கொடுவிலார்பட்டி, ராம்ஜிநகர் புறநகர், மாத்தூர் புறநகர், திருச்சி கிழக்கு-மேற்கு பகுதி, செங்கோட்டை புறநகர், காரியாப்பட்டி புறநகர், இளம்பிள்ளை புறநகர், பாகலூர் புறநகர், திருச்செங்கோடு புறநகர், வாழவந்தான்கோட்டை பகுதி ஆகியன ஏற்கெனவே இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்கப்படும் என்றார்.


No comments:

Post a Comment