Sunday, 21 August 2016

டிஎன்பிஎஸ்சி : குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை

டிஎன்பிஎஸ்சி : குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை
கடந்த 2012-2014 -ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணையை அதன் தலைவர் கே.அருள்மொழி வெள்ளிக்கிழமை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் 2012-2014-ஆம் ஆண்டுக்கான குரூப் -1 தேர்வுக்கு 3 துணை ஆட்சியர், 33 காவல் துறை கண்காணிப்பாளர், 33 வணிக வரித் துறை உதவி ஆணையர், 10 ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என காலியாக இருந்த 79 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 17-இல் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 9 -ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 163 பேர் பங்கேற்றனர். இதையடுத்து எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடங்கிய ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.12) வெளியிடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஆக.19) கலந்தாய்வு நடத்தப்பட்டு 79 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விருதுநகரைச் சேர்ந்த சி.வித்யா (துணை ஆட்சியர்) முதலிடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த இ.சதீஷ்குமார் (காவல் துறை துணை காண்காணிப்பாளர்) இரண்டாமிடத்தையும், சி.ஜெயப்பிரீத்தா (துணை ஆட்சியர்) மூன்றாமிடத்தையும் பிடித்தனர். தேர்வு செய்யப்பட்ட 79 பேருக்கும் பணி ஒதுக்கீட்டு ஆணையை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி வெள்ளிக்கிழமை வழங்கினார்.நேர்மையான அதிகாரியாக... தேர்வில் முதலிடத்தைப் பிடித்த சி.வித்யா கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வில் முதலிடத்தைப் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தேர்வுக்காக தினமும் 3 -5 மணி நேரம் வரை கடும் பயிற்சி மேற்கொண்டேன். பணியாற்றும் காலம் முழுவதும் நேர்மையாக இருந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனக்கு ஆலோசனைகள் வழங்கிய சென்னை அப்பல்லோ பயிற்சி மையம், எனது கணவர் பிரசன்னா, நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.பணி ஒதுக்கீடு பெற்ற தம்பதி: சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த டி.சுரேஷ் (துணை ஆட்சியர்), விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த எஸ்.வாசுகி (வணிக வரித் துறை உதவி ஆணையர்) குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட சுரேஷ் -வாசுகி தம்பதியர், தற்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வசித்துவருகின்றனர்.டி.சுரேஷ் கள்ளக்குறிச்சியில் கால்நடை உதவி மருத்துவராகவும், வாசுகி திருக்கோவிலூரில் கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.இதுகுறித்து சுரேஷ் -வாசுகி கூறுகையில், "குரூப் 1 தேர்வுகளில் முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும் மனம் தளர்ந்துவிடாமல் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி சாத்தியமாகும்.காதலில் வெற்றி பெற்ற நாங்கள் குரூப் -1 தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது' என்றனர்.


No comments:

Post a Comment